குடும்பங்களுக்கான வழிகாட்டி

உங்கள் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்பு (Kinder Kit) பற்றி
உங்கள் குழந்தையின் கற்றல் மற்றும் வளர்ச்சியில் உதவி செய்ய விளையாட்டு ஒரு வேடிக்கையான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய வழியாகும். அந்தப் பயணத்தில் பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்புகள் (Kinder Kits) புத்தகங்கள், கல்வி சார்ந்த விளையாட்டுப் பொருட்கள், அத்துடன் உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினர் வீட்டில் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்காகச் செய்யப்பட்ட செயல்பாடுகளால் நிரம்பியுள்ளன.
ஒவ்வொரு குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்பும் (Kinder Kit) குறிப்பாக மூன்று வயது குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டுள்ளது.

விக்டோரியன் ஆரம்ப ஆண்டுக் கற்றல் மற்றும் மேம்பாட்டுக் கட்டமைப்பு
ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்திற்கான ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் உங்கள் குழந்தை வளர மற்றும் கற்றுக்கொள்ள உதவுகிறார்கள்.
மழலையர்ப் பள்ளித் திட்டங்கள், விக்டோரியன் ஆரம்ப ஆண்டுக் கற்றல் மற்றும் மேம்பாட்டுக் கட்டமைப்பைப் (VEYLDF) பயன்படுத்துகின்றன.
உங்கள் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்பில் (Kinder Kit) உள்ள அனைத்தும் VEYLDF -இல் 1 அல்லது அதற்கு மேற்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டுப் பலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளன:
- அடையாளம்
- கற்றல்
- சமூகம்
- தொடர்புகொள்ளல்
- நல்வாழ்வு
முதுகுப் பை (backpack)
குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்பு (Kinder Kit) அடங்கிய முதுகுப் பைகளைத் தினமும் பயன்படுத்தலாம்.
பின்புறத்தில் உள்ள பெயர் இணைப்புச் சீட்டில் உங்கள் குழந்தை படம் வரைவதைப் பயிற்சி செய்யலாம், இதன் மூலம் அவர்களுடைய பை எது என்பதை அவர்கள் அறிவார்கள்.
முதுகுப் பையை விரித்து, 'வெல்க்ரோ' பட்டைகள் (Velcro tabs) மூலம் இறுகக் கட்டவும். கற்பனையைத் தூண்டக்கூடிய விளையாட்டுக்கு ஒட்டுக் கம்பள (felt) மேற்பரப்பைப் பயன்படுத்தவும்.

- முதுகுப் பையின் (backpack) பட்டைகளை இறுக்கியோ, தளர்த்தியோ மாட்டவும், அதன்மூலம் பையானது உங்கள் குழந்தையின் முதுகில் மேலே இருக்கும்.
- ஒட்டுக் கம்பள ஒட்டுப்படங்களுடன் (felt stickers) கூடிய ஒரு தோட்டத்தை உருவாக்கவும்.
- பெயர் இணைப்புச் சீட்டில் படம் வரைவதை ஊக்குவிக்கவும்.
- எழுதுவதற்கு முந்தைய திறன்களைப் பயிற்சி செய்யவும்.
வாசித்தல்
ஒரு குடும்பமாக ஒன்றாக நேரத்தைச் செலவிட, வாசித்தல் ஒரு சிறந்த வழியாகும். எழுத்தறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மிக முக்கியமான வழிகளில் இதுவும் ஒன்றாகும்.
உங்கள் குழந்தையுடன் வழக்கமான கதை நேரத்தைப் பகிர்ந்து கொள்வது அவர்களது கற்பனை மற்றும் சொல் வளத்தை வளர்க்க உதவும்.

- ஒன்றாகச் சேர்ந்து ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுங்கள்.
- அமர்ந்து, படிப்பதற்கு ஏற்ற ஒரு வசதியான இடத்தைக் கண்டறியவும்.
- கதையில் அடுத்து என்ன வரக்கூடும் என்பது பற்றிய அவர்களின் கருத்துக்களை வழங்க அவர்களுக்கு இடைவெளி கொடுங்கள்.
- வெவ்வேறு குரல் ஒலிகளைப் பயன்படுத்தவும்.
வரைதல் மற்றும் குறியீடு செய்தல்
வரைதல் மற்றும் குறியீடு செய்தல் போன்றவை குழந்தைளின் திறன்களை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த அனுமதிக்கிறது. காகிதத்தில் வண்ணக் கட்டிகளால் வரைந்து பரிசோதிப்பதன் மூலம், குழந்தைகள்:
- நுண் தசை இயக்குத் திறன்களை வளர்த்துக் கொள்ளுவார்கள், இது எப்படி எழுதுவது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு முக்கியமானதாகும்
- அவர்களது கை-கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவார்கள்
- வண்ணங்கள், வடிவங்கள், கோல அமைப்புகள் மற்றும் கோடுகள் பற்றி அறிந்து கொள்வார்கள்
- படைப்பாற்றலை வெளிப்படுத்துவார்கள்
- மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வார்கள்.

- வரையும் செயல்முறையை அனுபவிக்க உங்கள் குழந்தையை ஊக்குவிக்கவும். வரைதல் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.
- வரையும்போது பேசுங்கள்.
- நிறங்கள் மற்றும் வடிவங்களைக் கவனித்து, அவற்றுக்குப் பெயரிடவும்.
ஆக்கபூர்வமான செயல்பாடுகள்
ஆக்கப்பூர்வமான விளையாட்டு உங்கள் குழந்தையின் 5 புலன்களையும் - பார்வை, வாசனை, கேட்டல், தொடுதல் மற்றும் சுவையுணர்வு ஆகியவற்றைத் தூண்டுகிறது. உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், கண்டறியவும், கற்றுக் கொள்ளவும் இது ஒரு வேடிக்கையான வழியாகும்.

- தொகுதிகளை அடுக்கி வைக்கும் போது மீண்டெழும் தன்மையைப் பயிற்சி செய்வதை ஊக்குவிக்கவும். தொகுதிகள் கீழே விழுந்தால், உங்கள் குழந்தை 3 ஆழமான மூச்செடுத்து, அதன்பின் மீண்டும் முயற்சி செய்யலாம்.
- விளையாட்டு மாவை உருண்டையாக உருட்டி, வடிவங்களை உருவாக்கவும், தட்டையாக்கவும், பிசையவும் முயற்சி செய்யவும்.
- ஒன்றாக இசையை உருவாக்கம் செய்யவும். உங்கள் கைகளைத் தட்டுவதன் மூலமோ, அல்லது வீட்டில் இருக்கும் பொருட்களைத் தட்டுவதன் மூலமோ வெவ்வேறு தாளங்களையும், ஓசைகளையும் உருவாக்கவும்.
வெளிப்புற விளையாட்டு
மேற்பார்வையுடன் கூடிய வெளிப்புற விளையாட்டு உங்கள் குழந்தையின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நல்வாழ்வின் ஒரு பெரிய பகுதியாகும்.
குழந்தைகள் செய்யக்கூடியவை:
- இயற்கையைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் அறிவியலுடனான உறவை ஆராய்ந்து மேம்படுத்திக் கொள்ளலாம்
- சுதந்திர உணர்வைப் பெறலாம்
- மற்ற குழந்தைகளுடன் சமூகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்
- விளையாடும்போது நல்ல விருப்பங்களை எவ்வாறு தெரிவு செய்வது என்பதை ஆராய்ந்து கற்றுக்கொள்ளலாம்
- முழு உடல் இயக்கம், கை-கண் ஒருங்கிணைப்பு மற்றும் நுண் தசை இயக்கம் மற்றும் படைப்பாற்றல் திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்.

- இலைகளைப் பற்றிப் பேசவும், மற்றும் வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களுக்குப் பெயரிடவும்.
- விதைகளை ஒன்றாகச் சேர்ந்து நடவும்.
- இயற்கையோடு இணைந்திருக்கவும். நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றிப் பேசவும்.
- மணற் கோட்டைகளை உருவாக்கவும்.
உயிர்த்துடிப்பான நாடகம்
கற்பனைக் கதைகளை நடித்துக் காட்டவும் மற்ற கதாபாத்திரங்களின் பாத்திரங்களை ஏற்கவும் உயிர்த்துடிப்பான நாடகம் குழந்தைகளை ஊக்குவிக்கிறது.
முக்கியமான மொழித் திறன்கள் மற்றும் சமூகத் திறன்களைப் பயிற்சி செய்யக் குழந்தைகள் உயிர்த்துடிப்பான நாடகத்தைப் பயன்படுத்துகின்றனர், அதில் பின்வருவன அடங்கும்:
- புதிய உலகங்களை ஆராய்ந்து உருவாக்குதல்
- பகிர்தல் மற்றும் சுழற்சி முறையில் செயல்படுதல்
- ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்குமான வழிமுறைகள்.

- விலங்குகளுக்கு ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பெயரிடவும்.
- கதாபாத்திரங்களை உருவாக்கவும்.
- கதைகளை உருவாக்கவும்.
- உணர்ச்சிகளையும் வெவ்வேறு மனக்கிளர்ச்சிகளையும் ஆராய்ந்து வெளிப்படுத்த, பொம்மைகளைப் பயன்படுத்தவும்.
விளையாட்டுகள்
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் விளையாடுவது உங்கள் குழந்தையின் சமூகத் திறன்களை வளர்ப்பதற்கான சிறந்த வழியாகும்.
எண்ணறிவு, மொழியறிவு, மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களைக் கற்றுக்கொள்வற்கு விளையாட்டுகள் குழந்தைகளுக்கு உதவும்.

- விளையாட்டு விதிமுறைகளைக் கற்றுக் கொள்ளவும், அத்துடன் சுழற்சி முறையில் பயிற்சி செய்யவும்.
- சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் நினைவகத் திறன்களைப் பயிற்சி செய்யவும்.
- எண்களைப் பற்றி விவாதிக்கவும், மற்றும் பொருட்களை வைத்து எண்ணுவதைப் பயிற்சி செய்யவும்.
சமூகத்தை உருவாக்குதல்
விளையாட்டு என்பது குழந்தைகள் தங்களைப் பற்றியும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் எவ்வாறு கண்டுபிடித்துக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதாகும். குழந்தைகளுக்கு விளையாட்டும் கல்வியும் கைகோர்த்துச் செல்பவை. பன்முகத்தன்மை மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய உரையாடல்களை நிகழ்த்த உங்கள் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்பில் (Kinder Kit) உள்ள பொருட்கள் உதவுகின்றன.

- பிற நாடுகளைப் பற்றியும், அவற்றின் தேசிய விலங்குகள் குறித்தும் உங்கள் குழந்தையுடன் பேசவும்.
வெவ்வேறு மொழிகள் எங்கிருந்து தோன்றுகின்றன என்பதை அறிந்துகொள்ள உலக வரைபடத்தைப் பார்க்கவும்.
அடையாளத்தை மதித்தல்
எல்லா கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்ள குழந்தைகளை ஊக்குவிப்பது என்பது, புரிதல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் பெருமை ஆகியவற்றை உருவாக்குகிறது. பழங்குடியினர் மற்றும் டோரஸ் நீரிணைத் தீவினர் கலாச்சாரங்களும், இங்கு விக்டோரியாவில், கூரி (Koorie) கலாச்சாரங்களும், இன்றும் உயிர்ப்புடன் செழித்து வருகின்றன. 'கிட்ஸில்' (Kits) படைப்பாசிரியர்களாகவும், கலைஞர்களாகவும் அவர்களைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். கூரி (Koorie) மரபுகள் மற்றும் கலாச்சாரங்களைப் பற்றி உங்கள் குழந்தை மேலும் அறிந்து கொள்ள உதவும் சில செயல்பாடுகள் இங்கே உள்ளன:

- பொருட்கள் அல்லது விலங்குகளுக்கான 'கூரி' (Koorie) குறியீடுகளைக் கற்றுக்கொள்ளவும்.
- கூரி (Koorie) கலாச்சாரங்கள், தலைவர்கள் மற்றும் நாயகர்கள் பற்றி அறிந்து கொள்ளவும், மற்றும் அவற்றைப் பற்றி உரையாடவும்.
- நாடு பற்றிய அங்கீகார ஏற்புரையின் முக்கியத்துவத்தைக் கண்டறியவும்.
விக்டோரியப் பழங்குடியினர் கல்விக் கூட்டமைப்பின் (The Victorian Aboriginal Education Association Inc.) இணையதளமானது 'கூரி' (Koorie) மரபுகள் மற்றும் கலாச்சாரங்களை ஆராயும் வேடிக்கையான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலிய சைகை மொழியில் (Auslan) புத்தகங்கள்
'ஆஸ்லான்' (Auslan) என்பது விக்டோரியாவின் ஆரம்பகாலக் குழந்தைப் பருவ மொழித் திட்டத்தில் பயன்படுத்தப்படும் சைகை மொழியாகும். இந்தத் திட்டம் நான்கு வயதினருக்கான மழலையர் பள்ளிகள் சிலவற்றில் கிடைக்கிறது.
குழந்தைகள் இளம் வயதிலேயே வேறு மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் பல நன்மைகள் உள்ளன, அதில் பின்வருவன அடங்கும்:
- வாசித்தலுக்கு முந்தைய, மற்றும் எழுதுவதற்கு முந்தைய திறன்கள் அதிகரித்தல்
- அறிதிறனில் நெகிழ்வுத் தன்மை
- சுயமரியாதை மற்றும் நல்வாழ்வை உயர்த்துதல்
- கலாச்சார அடையாளத்தை வலுவூட்டுதல்.
2025 குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்புகளில் (Kinder Kits) சேர்க்கப்பட்டுள்ள பல புத்தகங்களில் 'ஆஸ்லான்' (Auslan) மொழிபெயர்ப்புகள் உள்ளன.

- 'ஆஸ்லான்' (Auslan) மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தவும்.
- 'ஆஸ்லான்' (Auslan) மொழியில் வணக்கம் சொல்லவும்.
நல்வாழ்வு மற்றும் கூடுதல் ஆதரவு
அனைத்துக் குழந்தைகளும் வெவ்வேறு வகையில் தங்கள் சொந்த வேகத்தில் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்புகள் (Kinder Kits) உங்கள் குழந்தைக்குப் புத்தகங்கள் மற்றும் கல்வி சார்ந்த விளையாட்டுப் பொருட்களை வழங்குகின்றன, அவை அனைத்து திறன்களையும் எதிர்கொள்ளப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படலாம்.
உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால், பின்வரும் வழிகளில் உதவி கிடைக்கும்:

- ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்திற்கான ஆசிரியர்களுக்கு உதவும் திறமையும் அறிவும் உள்ளது. உங்கள் கேள்விகளைப் பற்றி உங்கள் குழந்தையின் ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்திற்கான ஆசிரியரிடம் பேசவும்.
- உங்கள் மருத்துவரை அல்லது தாய்சேய் நலச் செவிலியரைக் காண நேர ஒதுக்கீடு ஏற்படுத்திக்கொண்டு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள்.
- இலவச, இரகசிய ஆலோசனை மற்றும் உதவி பெற, Parentline-ஐ 13 22 89 என்ற எண்ணில் அழைக்கவும்.
ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியில் வாழ்க்கைத் தொழில்கள்
விக்டோரியாவின் வளர்ந்து வரும் மழலையர் பள்ளித் துறையில் ஒரு வாழ்க்கைத் தொழிலைத் தொடங்குவதைப் பற்றிக் கருத்தில் கொள்ளவும். ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்திற்கான ஆசிரியர் அல்லது கல்வியாளராக ஆவதற்கு உங்களுக்கு உதவிட, பின்வருவன உள்ளன:
- இணக்கமான படிப்புத் தெரிவுகள்
- தாராளமான உதவித்தொகைகள்
- நிதி ஊக்கத்தொகை.

உங்கள் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் வை நன்கொடையாக வழங்குதல்
உங்கள் குழந்தை தனது குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களின் தொகுப்பில் (Kinder Kit) உள்ள பொருட்களை பயன்படுத்தி முடித்தவுடன், அவற்றை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குவதைக் கருத்தில் கொள்ளவும், இதனால் வேறு யாராவது அவற்றை விரும்பிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு பொருளை நன்கொடையாக வழங்கலாம் என்று தீர்மானிக்கும் போது, ஒரு பயனுள்ள வழிகாட்டி இது: நான் இதை ஒரு நண்பருக்குக் கொடுக்கலாமா? ஆம் என்று பதிலளித்தால், ஒரு தொண்டு நிறுவனத்திற்குக் கொடுப்பதே பொருத்தமானது.
பொருத்தமான பொருட்களை நன்கொடையாக வழங்குவது என்பது நிலைத்திருத்தலிலும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அவசியமாகும்.

Updated